Land Document Registration in Tamil l கிரைய பத்திரம் பதிவு பண்ணுவதற்கு முன் கவனிக்க வேண்டியவைகள்?
Land Document Registration in Tamil l கிரைய பத்திரம் பதிவு பண்ணுவதற்கு முன் கவனிக்க வேண்டியவைகள்?
Land Document Registration |
LAND DOCUMENT REGISTRATION:
Land Document Registration செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இப்போது பார்ப்போம். Land Document Registration Online மூலமாக பண்ணுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் ஒரு சொத்தை வாங்க போகிறீர்கள் என்றால் பத்திர பதிவு துறையில் பதிய வேண்டும். உரிமை மாற்றத்திற்கான கிரைய பத்திரத்தை பதிவு செய்வதற்கு முன்பாக கீழ்காணும் கட்டுப்பாடுகளுக்குள் பத்திர பதிவு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். நீங்கள் சொத்து பத்திரம் எழுதும் போது எந்த பிழையும் இல்லாமல் எழுத வேண்டும்.
- ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
- மேற்படி கிரயபத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரையப் பத்திர பதிவு ஆகும்.
கிரைய பத்திரம் பதிவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவைகள்:
- முதலில் சொத்தை யாரிடம் இருந்து வாங்குகிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது எந்த உரிமையாளரிடமிருந்து சொத்தை வாங்குகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
- நீங்கள் சொத்தை வாங்கும் உரிமையாளர் என்ன மனநிலையில் உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை உரிமையாளர் மனநலம் பாதிக்கபட்டு இருந்தாலோ அல்லது மைனராக இருந்தாலோ அவருடைய கார்டியனிடம் நீதிமன்ற அனுமதியுடன் கையெழுத்தை பெற வேண்டும்.
- நீங்கள் சொத்தை வாங்கும் உரிமையாளர் Business ல் நஷ்டமடைந்தவராக (INSOLVENT) இருந்தால். சொத்து காப்பாளர் (ASSIGNEE) நீதிமன்ற அனுமதியுடன் எழுதி கொடுக்க வேண்டும்.
- சர்ச் (Church), நிலங்களை வாங்க போகிறீர்கள் என்றால் அறங்காவலர் குழு & Bishop அனுமதி கொடுக்க வேண்டும்.
- இந்து கோவில் சொத்து என்றால் அறநிலையத்துறை அனுமதி பெற வேண்டும்.
- இஸ்லாமிய அறக்கட்டளை என்றால் வக்ஃப் வாரியம் அனுமதி வேண்டும்.
- கூட்டு பங்கு நிறுவனத்தின் சொத்து என்றால் சொத்தை விற்க அனுமதி பெற்ற பார்ட்னர் (அ) அனைத்து பங்குதாரர்களும் உடன் இருப்பது நன்று.
- கம்பெனி சொத்து என்றால், கம்பெனி சட்டப்படி கம்பெனி நிர்வாக குழு தீர்மானம் செய்து சொத்தை விற்க அனுமதி வழங்கியுள்ளதா என்றும், கையெழுத்து போட வரும் நபருக்கு தீர்மானம் மூலம் அதிகாரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
- திவாலாகி விட்ட கம்பெனி சொத்துகளை நீதிமன்றத்தின் அதிகார பூர்வ கலைப்பலுவலர் (LIQUIDATOR) க்கு மட்டுமே உரிமை இருக்கிறது.
- வங்கியில் சொத்து பத்திரம் வைத்து கடன் வாங்கி கடனை திரும்ப செலுத்த முடியவில்லையென்றால், கடனாளிகளின் சொத்தை விற்க வங்கியின் அதிகார பூர்வ ஏலத்துறையினர் விற்க அதிகாரம் உண்டு.
- அனுபவ பாத்தியத்தின் அடிப்படையில் (12 வருட அனுபவம் காட்டி) ADVERSE POSSESSION சொத்தை விற்கிறார் என்றால், நீதிமன்றத்தின் மூலம் விளம்புகை நீதிமன்ற ஆணையை பெற்றிருக்க வேண்டும்.
- நாட்டை விட்டு வெளியேறியவர் சொத்து அல்லது குடிபெயர்ந்தவர் சொத்து என அறிவிக்கபட்டிருந்தால், அந்த சொத்தை அரசு பாதுகாப்பாளர் (CUSTODIAN) மட்டுமே விற்க உரிமை பெற்றவர்.
- வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.
- நான்கு நபர்களுக்கு உரிய பொதுவான சொத்தை விற்க வந்தால் அதிகாரம் இன்னும் தொடர்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
- ஒரு சொத்தில் பல காலம் குத்தகைதாரராக இருப்பவருக்கு சொத்தை அவரே வாங்கி கொள்ள உரிமை இருக்கிறது. குத்தகையில் இருந்த சொத்தை விற்கும் போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும்.
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தாட்கோ, சிப்காட், டிட்கோ போன்ற அரசு நிறுவனங்கள் சொத்துகளை விற்கும் பொழுது அவற்றை விற்பனை செய்ய அந்த அதிகாரிகள் உரிமை பெற்றுள்ளாரா என்று நேரடியாக சென்று விசாரிக்க வேண்டும்.
- எழுதி கொடுப்பவரின் பெயர் & Initial, அடையாள அட்டை (ID Card), பட்டா, மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
- எழுதி கொடுப்பவர் ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது உள்ள முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பாத்திரத்தில் காட்ட வேண்டும்.
- நீங்கள் எழுதும் சொத்துக்களுக்குரிய அசல் முன் ஆவணங்கள் எழுதிக் கொடுப்பவர்களிடம் உள்ளதா என முதலில் கேட்டறிந்து நேரில் பார்க்க வேண்டும். அசல் முன் ஆவணம் இல்லை எனில் பத்திரம் பதிய முடியாது.
- அப்படி அசல் முன் ஆவணம் இல்லாத போது சொத்தை எழுதிக்கொடுப்பவர்களால் காவல் நிலையத்தில் பத்திரம் காணாமல் போனதற்கான Non Traceable Certificate வாங்க வேண்டும்.
- கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர், Initial, முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
- கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது.
- அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
- அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து செட்டில்மென்ட் பாகப்பிரிவினை விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
- உயில், தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
- பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
- பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
- கிரயம் எழுதி கொடுப்பவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம், ரிஷிமூலம், பார்த்து அனைத்து லிங்க் document ஐயும் வரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது.
- கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் Agreement போடும் போது கொடுக்கப்பட்டது. எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது. எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது. எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
- கிரையம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
- தானம்
- அடமானம்
- முன் கிரையம்
- முன் agreement
- உயில்
- செட்டில்மென்ட்
- கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி
- Revenue Attachment
- வாரிசு பின் தொடர்ச்சி
- மைனர் வியாஜ்ஜியங்கள்
- பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்
- சொத்து ஜப்தி
- சொத்து ஜாமீன்
- பைசலுக்காக சர்கார் கடன்கள்
- வங்கி கடன்கள்
- தனியார் கடன்கள்
- சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை
- சிவில் கிரிமினல் வழக்குகள்
- சர்கார் நில ஆர்ஜிதம்
- நிலக்கட்டுப்பாடு
- அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்
- நில உச்ச வரம்பு கட்டுப்பாடு
- பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
- இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை.
- சர்கார் வரி வகைகள் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டது. சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
- சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ கதவு எண் இருந்தாலோ நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண், தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.
- இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும், பிரிட்டிஷ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.
- கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
- பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு உள்ளாரா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவரின் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
- தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.
- ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணதாரர்கள் முகவரி, சொத்துரிமை, சொத்து விவரங்கள் போல் ஆவண எழுத்தர்களால் ஆன்லைனில் பதிவேற்றம் index செய்யப்பட்டுள்ளதா ஆவண சுருக்க முன் வரைவு ஆவணத்தை சரி பார்த்த பின்பு பதிவுக்கு செல்லுதலே சிறந்தது. இதில் தவறு ஏற்பட்டால் பின்பு சரி செய்வது மிக கடினம்.
- சொத்தின் விலைக்கேற்ப முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கப்பட்டுள்ளதா, பதிவுக்கட்டணம், E-Payment சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் கையொப்பம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
- பத்திரங்களை Type செய்த பிறகு அதில் எதாவது பிழை உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள Drafting Print அதாவது A4 Paper ல் மாதிரி எடுத்து நன்றாக படித்து பிழையிருந்தால் திருத்தம் செய்த பின்பு பத்திரங்களில் Final Print செய்வதே நல்லது. ஏனெனில் பதிவு செய்த பின்பு பிழைகளை கண்டறிந்தாலும் ஏற்கனவே ஆவணங்களில் கையெழுத்திட்டவர்களும் நேரில் வந்து பிழைதிருத்தல் ஆவணங்கள் எழுதுவதும் அதற்கேற்படும் மன உளைச்சலும் செலவீனங்களையும் தவிர்க்கலாம்.
- தங்களுடைய சொத்துகளுக்கு உண்டான பத்திரங்கள் எழுதுவதற்கு முன்பு பத்திரம் எழுதுபவர்களுக்கு அதாவது ஆவண எழுத்தர்களுக்கு அரசு உரிமம் உள்ளதா என கேட்டறிந்து செல்லவும். ஏனெனில் நிறைய போலி எழுத்தர்கள் உள்ளனர். அதாவது போலி எழுத்தர்கள் தங்களை பத்திர எழுத்தரை போலவே அறிமுகம் செய்துக்கொண்டு Computer Center களை வைத்துக்கொண்டு பத்திரம் தயார் செய்துக்கொண்டு கடைசி பக்கத்தில் சாட்சிகளுக்கு அடுத்தபடியாக ஆவணம் வரைவு செய்தவர் என்ற இடத்தில் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களிடம் சென்று கையொப்பம் வாங்கிக்கொள்வார்கள். ஆவண வரைவு தயாரித்தவர் ஒருவரும், ஆவணம் வரைவு தயாரித்து கையெழுத்திடுவது வேறொருவரும் இருப்பார். ஆகவே விலை மதிப்புமிக்க நமது சொத்துக்களை பத்திரங்களை எழுதுபவரும் நமது ஆவணத்திற்கு மிக முக்கிய சாட்சியை போன்றவர். எனவே ஆவண எழுத்தர்களுக்கு அரசு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொண்டு செல்லவும்.
மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்
No comments